நாமக்கல்: திருச்செங்கோடு எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் செல்வம். கட்டிட மேஸ்திரியான இவருடைய மனைவி சிவகாமி (45). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று (ஜன.2) காலை 8 மணிக்கு சிவகாமியின் மகள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் செல்போனை எடுக்காததால் தந்தை செல்வத்திற்கு போன் செய்தார்.
இதையடுத்து செல்வம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சிவகாமி தற்கொலை செய்துக் கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்து. அலறியபடி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிவகாமியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிவகாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த சிவகாமியின் செல்போனில் சுமார் 9 நிமிடம் பேசும் வீடியோ பதிவு இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த வீடியோவில், அதே பகுதியை சேர்ந்த மாதேஸ்வரி என்பவரிடம் சிவகாமி நகையை வைத்து பணம் வாங்கியதாகவும், அதற்கு பெரும்பகுதி பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும், ஆனால் மீதி பணத்தை கேட்டு அந்த பெண் அடிக்கடி நெருக்கடி கொடுத்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும், பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்றால் விபச்சாரம் செய்து அல்லது கிட்னியை விற்று பணத்தை திருப்பி தருமாறு மாதேஷ்வரி என்ற பெண் சிவகாமியை வற்புறுத்தியதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். தனது மகனிடம் தந்தையை நன்றாக பார்த்து கொள்ளுமாறும் அந்த வீடியோவில் உருக்கமாக அவர் பேசியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட செல்போன் மற்றும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 4 சுற்றுலா பயணிகள் பலி...