நாமக்கல்லில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில தலைவர் தெய்வசிகாமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “விவசாயிகள் எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும் அரசாங்கம், கண்டுகொள்வதில்லை, போராட்டங்களை தள்ளி வைத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து போராட்டத்தையே பிசுபிசுத்து போக வைக்கின்றனர்.
போராட்டங்களால் வெற்றி பெற முடியாது என இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் சோர்ந்து விட்டனர். எனவே தங்களது வாக்குகளையே தற்போது போராட்டத்திற்கான ஆயுதமாக எடுத்துள்ளோம். ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல் கட்சியினருக்கே ஆதரவு தெரிவிக்கவுள்ளோம்.
அதன்படி வருகின்ற 6ஆம் தேதி திருச்சியில் மகா பஞ்சாயத்து கூட்டம் என்ற கூட்டத்தை நடத்தவுள்ளோம். அதில் தமிழ்நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். பிரிந்து கிடக்கும் விவசாயிகளை ஒன்று திரட்டி விவசாயிகளின் வாக்குகளை ஆயுதமாக மாற்ற உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன், நகைக்கடன் போன்றவற்றை தள்ளுபடி செய்துள்ளது. அவற்றில் 90 சதவீதம் பேர் அதிமுகவை சேர்ந்தவர்கள் தான் பயனடைந்துள்ளனர். ஆனால் பெரும்பாலான விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் கடன்கள் வாங்கியுள்ளனர். ஏனெனில் கூட்டுறவு வங்கிகளில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் கடன் தருவதில்லை.
ஆனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 3 லட்சம் வரை கடன்கள் தருகின்றனர். அதன்காரணமாக அதிக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். கர்நாடகாவில் கடந்த 2019ஆம் ஆண்டு அனைத்து வங்கிகளில் வாங்கிய கடன்களையும் ரத்து செய்தது போல் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:1.92 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி: மயிலாடுதுறை வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கம்