நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா தலைமையில் ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் அமைச்சர்கள் கேட்டறிந்து, தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று பாதிப்பை குறைப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர்.
பின்னர் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பாதிப்பு அடைந்த பகுதிகளை சிறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, பிற தொழில்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 75 ஆயிரம் மின் இணைப்புகள் தட்கல் முறையில் வழங்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில், 13 ஆயிரம் ரேஷன் அட்டைகளுக்கு 13 நடமாடும் வாகனங்கள் மூலம் ரேஷன் பொருள்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், கிசான் திட்ட மோசடியில் இதுவரை ரூ.47 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இதுகுறித்து யாரும் பேச கூடாது என கட்சி தலைமை கூறியுள்ளது என பதிலளித்தார்.