நாமக்கல்: ராசிபுரத்தை அடுத்து வெண்ணந்தூர் அருகே உள்ள சோதனைச்சாவடியில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலப் பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதித்தனர்.
பின் அதில் வந்த மூன்று நபர்களிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் காரை முழுமையாகச் சோதனைசெய்தனர்.
அப்போது அதிலிருந்து சுமார் நான்கடி நீளமும், ஐந்து கிலோ எடையும் கொண்ட பாம்புகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து கடத்தல்காரர்கள் தப்பி ஓட முயன்றபோது அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்த காவல் துறையினர், ராசிபுரம் வனத் துறை அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்து, வனச்சரகர் ரவிச்சந்திரனிடம் காரையும், மூன்று பேரையும் ஒப்படைத்தனர்.
காரில் வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் (49), ஆல்பின் (48), வில்பிரின் (36) ஆகிய மூவரிடமும் நாமக்கல் மாவட்ட வனச்சரக அலுவலர் ராஜாங்கம் விசாரணை மேற்கொண்டார்.
இதில் மண்ணுளி பாம்புகளை கன்னியாகுமரி வழியாக கேரளாவிற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மூவரும் எங்கிருந்து பாம்புகளை எடுத்துவருகின்றனர் என்பதும் இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பதும் முழு விசாரணைக்கு பின்பே தெரியவரும் என வனத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆய்ஷாவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் ராஜினாமா... லட்சத்தீவில் திடீர் திருப்பம்