ராசிபுரத்தை அடுத்துள்ள ஆர்.புதுப்பட்டி புளியமரத்து தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவருக்கும் சொந்தமான நிலத்தின் பாதைப் பிரிவினையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. நாளடைவில் இத்தகராறு விரோதமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி அன்று மாரப்பனும் அவரது மகன் சிவக்குமாரும் சேர்ந்து அரிவாளால் அய்யாவு மற்றும் அவரது மகன் சிவக்குமார் இருவரையும் வெட்டி கொலைசெய்துள்ளனர்.
இது தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மாரப்பனையும், அவரது மகன் சிவக்குமாரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இது தொடர்பான வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த மூன்று வருடங்களாக நடந்து வந்தது. இன்று இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி தனசேகரன் குற்றவாளிகளான மாரப்பன், சிவக்குமார் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையை விதித்து தீர்ப்பு வழங்கினார்.