நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள வண்டலூர் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு தேவையான சாலை, குடிநீர், கழிவறை, போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் நீண்டநாட்களாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த அக்கிராமத்தை சேர்ந்த திலகர் என்பவர் அங்கு உள்ள 120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன் என்றும், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என்றும், இல்லையென்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், தீயணைப்புப் படை வீரர்கள், வேளாங்கண்ணி காவல் துறையினர் ஆகியோர் திலகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து அவர் தற்கொலை முடிவை கைவிட்டு கீழே இறங்கி வந்தார். பின்னர் காவல் துறையினர் திலகரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் கடந்த ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து இதே போல் இவர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: