நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி அருகே 15 வயது சிறுமி காணாமல் போனது தொடர்பாக, 19 வயது இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரிடம் இருந்து சிறுமியை காவல்துறையினர் மீட்டனர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே 15 வயது சிறுமி திடீரென மாயமானார். இதுதொடர்பாக, சிறுமியின் தந்தை கீழையூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரின், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்தநிலையில், திருப்பூண்டி அருகே ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றிய இளைஞரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், காரப்பிடாகை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மேகநாதன் மகன் பிரசாத் (19) என்பதும், காணாமல் போன சிறுமியும், பிரசாத்தும் ஏற்கனவே பழகி வந்ததும், அச்சிறுமியை அவர் அழைத்து சென்றதும் தெரியவந்தது.
பின்னர் பிரசாத்திடம் இருந்து சிறுமியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர். இதையடுத்து சிறுமியை கடத்திய தொடர்பாக, இளைஞர் பிரசாத் மீது போக்சோ சட்டம் உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கீழையூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். தொடர்ந்து பிரசாத்திடம் விசாரணை நடத்திவருகின்றனர்.