மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். தற்போது கரோனா பரவல் காரணமாக, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் இருச்சகர வாகனங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை.
இந்நிலையில் இன்று(ஏப்.29) அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் ஒப்பந்த தொழிலாளர் மணிமேகலை பணியில் இருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர்.
அப்போது உள்ளே இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடாது என்று கூறியதும், இளைஞர்கள் அந்த பெண் பணியாளரைத் தரக்குறைவாக பேசியுள்ளனர். அவர் உள்ளே இருசக்கர வாகனத்தில் அனுமதிக்க முடியாது என்று கூறியதும், அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சக ஊழியர்கள் ஓடிவந்து தடுக்கவும், அவர்களையும் செங்கல், இரும்பு பைப்புகளை வீசி தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி, ஒப்பந்த பணியாளர்களின் மேற்பார்வையாளர் அருண் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் வரை தாங்கள் பணிக்கு செல்லமாட்டோம் எனக்கூறி சாலை மறியலை கைவிட்டவர்கள் மருத்துவப் பணிகளை புறக்கணித்து, சுமார் இரண்டு மணி நேரமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய இளைஞர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் என, பணியாளர்கள் குற்றம்சாட்டினர். இருப்பினும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.