நாகப்பட்டினம்: மது அருந்த அனுமதிக்காததால் ஹோட்டலை சூறையாடி உரிமையாளரையும் மாஸ்டரையும் தாக்கிய கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன் நாகப்பட்டினம் தோணித்துறை சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் மது அருந்த அனுமதிக்காததால், உணவகத்தை துவம்சம் செய்து உரிமையாளர், மாஸ்டரை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. இந்த தாக்குதலில் ஹோட்டல் உரிமையாளர் ஜாகிர் உசேன், மாஸ்டர் அப்துல்லா கான் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே ஹோட்டல் உரிமையாளர் ஜாகிர் உசேன் கொடுத்த புகாரின் பேரில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த நிவாஸ், அன்பரசன் ஆகியோரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், மதுரையில் தலைமறைவாக இருந்த நிவாஸ், அன்பரசன் ஆகிய இருவரையும் நாகை நகர காவலர்கள் இன்று கைது செய்தனர். மேலும் ஹோட்டல் சூறையாடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை நாகை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.