நாகப்பட்டினம் மாவட்டம் திருமுல்லைவாசல் ராதாநல்லூரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. அவரது மகள் சுபஸ் ரீ(18) என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த உதயபிரகாஷ் என்பவரும் 8 மாதங்களாகக் காதலித்துவந்தனர். அதையடுத்து உதயபிரகாஷின் நடவடிக்கைகள் பிடிக்காத சுபஸ்ரீ அவரிடமிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளார்.
அதனால் அவரைப் பார்க்கச் செல்வதையும், செல்போனில் பேசுவதையும் தவிர்த்துவந்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த பழிவாங்கும் நோக்குடன் உதயபிரகாஷ் சுபஸ்ரீயுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுவந்தார். அதையடுத்து ஜூன் 24ஆம் தேதி சுபஸ்ரீயின் வீட்டுக்குச் சென்ற உதயபிரகாஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத சொற்களால் திட்டியுள்ளார்.
அதைத் தட்டிக்கேட்ட சுபஸ்ரீயின் சகோதரி கர்ப்பிணி கலைமதியை உருட்டுக்கட்டையைக் கொண்டு தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சுபஸ்ரீயை வீட்டுக்குள் இழுத்துச் சென்று கடுமையாக அடித்துள்ளார். பின்னர் அவர்கள் சத்தமாக கூச்சலிடவே உதயபிரகாஷ் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.
இதற்கிடையில் சுபஸ்ரீ அவமானம் தாங்க முடியாமல் வீட்டிலிருந்த ண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக்கொண்டார். அதையடுத்து அவர் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் 85 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிவருகிறார்.
அவர் சீர்காழி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தபோது நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில், தானாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டதாக மட்டும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து சீர்காழி காவல் துறையினரும் தற்கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சுபஸ்ரீயிடம் அவரது உறவினர்கள் தற்கொலைக்கு காரணம் உதயபிரகாஷ்தான் என வாக்குமூலம் பெற்று அதனைச் செல்போனில் பதிவுசெய்துள்ளனர். மேலும் அவரது சகோதரிகள் உதயபிரகாஷை கைதுசெய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: ஸ்மார்ட் போன் வாங்கி தர மறுத்த கணவர் - மனைவி தீக்குளித்து தற்கொலை!