கரோனா முதல் அலை தாக்கம் ஏற்பட்ட போது, அதனைத் தடுக்கும் பொருட்டு மருத்துவக் கவுன்சில் மூலம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 45 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
செவிலியர்களுக்கு மாதம் 14,000 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் கடந்த மே மாதம் முதல் கரோனா சிறப்பு வார்டில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. செவிலியர் பற்றாக்குறை காரணமாக, கரோனா தொற்று ஏற்பட்ட செவிலியர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள, மருத்துவமனை நிர்வாகம் விடுப்பு வழங்வில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சிறப்பு செவிலியர்களுக்கான ஊதியம் நாகப்பட்டினம் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது ஒப்பந்த செவிலியர்களுக்கான சிறப்பு நிதி வராததால் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், நிதி ஒதுக்கீடு செய்த பின்பே சம்பளம் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமும் 12 மணி நேரம் சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் செவிலியர்களுக்கு உடனடியாக தங்குதடையின்றி காலதாமதம் செய்யாமல் நிதி ஒதுக்கீடு செய்து சம்பளம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் கோரிக்கை குறித்து மனு ஒன்றையும் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா மருந்து வாங்க நாட்டு வைத்தியரிடம் குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்!