நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி பேருந்து நிறுத்தம் அருகில் அரசின் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. மக்கள் கூடும் இடத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால், குடிகாரர்களின் தொந்தரவு காரணமாக அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வந்தனர்.
டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அலுவலர்கள் செவி சாய்க்காத காரணத்தால், நேற்று (செப்.05) டாஸ்மாக் கடையை மூட அப்பகுதி கிராம பெண்கள் முடிவெடுத்தனர்.
இதனால் அப்பகுதியில் நேற்று காலையில் இருந்து காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து, டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். அப்போது நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையால் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் கொலை மிரட்டல், அரசுப் பணியை தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட ஆறு பெண்கள்மீது கீழையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், அதிருப்தியடைந்த கிராம மக்கள், மது இல்லாத ஊராட்சியாக அறிவிக்கப்பட்டு, தங்களது ஊராட்சிக்கு வழங்கப்பட்ட உத்தமர் காந்தி விருதை மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் ஒப்படைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.