மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா எரவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்கி; இவரது மனைவி ரேவதி. ராம்கி சென்னையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். ரேவதி எரவாஞ்சேரியில் குழந்தைகளுடன் தங்கியுள்ளார். கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி ரேவதி தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, நள்ளிரவில் ரேவதியின் வீட்டுக்குள், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெயப்பிரகாஷ் என்பவர் அத்துமீறி புகுந்து, ரேவதியிடம் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளார். ரேவதி கத்தியதில் அவரின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரளவே, ஜெயப்பிரகாஷ் தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து, பெரம்பூர் காவல் நிலையம், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையங்களில், ஜெயப்பிரகாஷ் மீது ரேவதி ஏற்கெனவே புகார் அளித்துள்ளார். பெரம்பூர் காவல்துறையினர், புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டு, சமாதானமாக போகுமாறு ராம்கியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட ரேவதி, தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவை சந்தித்து, தன்னிடம் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற ஜெயபிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.
இந்த நிலையில், பாலியல் பலாத்கார முயற்சி நடைபெற்று 2 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க சென்றால், பாதிக்கப்பட்டவர்களை ஆட்சியருக்கு எதிரில் போடப்பட்டுள்ள இருக்கையில் அமர அனுமதிக்காமல், நிற்கவைத்தே மிரட்டும் தொனியில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் ரேவதியின் வழக்கறிஞர் சங்கமித்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதையும் படிங்க: குட்கா கடத்த முயன்ற நபர்கள் கைது: குட்கா மூட்டைகள் பறிமுதல்!