சீர்காழி அருகே எருக்கூரைச் சேர்ந்த செல்வி (38) உணவகம் நடத்திவருகிறார். மேலும் தனியார் சுய உதவிக்குழுக்கள் மூலம் கிராமப்புற பெண்களுக்குக் கடன் பெற்றுத்தருவதாகவும் கூறப்படுகிறது. கொடகாரமூலை கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா, ஜெயலெட்சுமி ஆகிய இருவரும் வெளிநாட்டில் உள்ள கணவருக்குத் தெரியாமல் குழு மூலம் கடன் பெற்று கடனை மாதாமாதம் செலுத்திவருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து ஊருக்குக் கணவர் வந்துள்ளதால் நிர்மலா ஜெயலெட்சுமி ஆகிய இருவரும் குழுவில் வாங்கிய கடனை சரி வரச் செலுத்தாமல் அலைக்கழித்துள்ளனர்.
எல்&டி நிறுவனத்தினர் நிர்மலா ஜெயலெட்சுமி வீட்டிற்குச் சென்று கடனை கேட்டுள்ளனர். அப்போது தாங்கள் கடனே பெறவில்லை எனவும், செல்விதான் தங்கள் பெயரில் கடனை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஆத்திரமடைந்த எல்&டி நிறுவனத்தினர் நிர்மலா, ஜெயலெட்சுமி, கணவர் உள்ளிட்ட ஆறு நபர்கள் சேர்ந்து செல்வி நடத்திவரும் கடைக்குச் சென்று தரக்குறைவாகப் பேசி திட்டியுள்ளனர். இது குறித்து செல்வி கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் ஆய்வாளர் ராஜேந்திரன் எதிர்த் தரப்பை விசாரணை செய்யாமல் செல்வியை மட்டும் விசாரணைக்கு அழைத்து எட்டி உதைத்து லத்தியால் கொடூரமாக அடித்துத் தாக்கியுள்ளார்.
இதில் மயக்கமடைந்து கீழே விழுந்த செல்வியைக் கணவர் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகச் சென்னை கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து செல்வியின் கணவர் சரவணசெல்வம சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் வந்தனாவிடம் கொள்ளிடம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.