நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்னநாகங்குடியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(32). இன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டின் அருகேயுள்ள சாலையில் செல்லும்போது பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதானால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தனியார் பேருந்தை அடித்து உடைத்ததுடன், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்து அங்குவந்த மயிலாடுதுறை காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் இவ்வழியாகவரும் பேருந்துகள் வேகத்தடையில்லாததால் அதிவேகமாக வருவதாகவும், இதனால் அப்பகுதியில் நிறைய விபத்துகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
அதன்பின் காவல் துறையினர் வேகத்தடை அமைக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். மேலும் அவர்கள் விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர். போராட்டத்தினால் மயிலாடுதுறை - சீர்காழி சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஓசூரில் லாரிகள் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்!