நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலையைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் - ராஜராஜேஸ்வரி தம்பதியினர். ஜெயக்குமாருக்கும் அவரது சகோதரர் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த மாதம் ஜெயக்குமாரை அவரது சகோதரர் தரப்பினர் தாக்கினர்.
இச்சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் காவல் துறையினரிடம் புகார் செய்தபோதும், ஜெயக்குமார் மீதே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சொத்துப் பிரச்னையை தீர்க்க காவல் துறையினர் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும் தெரிகிறது. இதனால், மன உளைச்சல் அடைந்த ஜெயக்குமார், கடந்த மாதம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
அவர் உயிரிழந்த பின்பு அவரது டைரியில், தனது சாவிற்கு யார் காரணம் என்று எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது. இந்தக் கடிதத்தை சுட்டிக்காட்டி, கட்டப் பஞ்சாயத்து செய்து சொத்தை எழுதித்தரச் சொல்லி மிரட்டி பொய்வழக்கு போட்ட காவலர்கள் மீதும், தனது கணவரை அவமானப்படுத்திய அவரது சகோதரர் தரப்பு மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜெயக்குமாரின் மனைவி ராஜராஜேஸ்வரி கடந்த 21ஆம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
அதன்பேரில் ராஜராஜேஸ்வரியை விசாரணைக்கு அழைத்த செம்பனார்கோவில் காவலர்கள், தன்னை காலை முதல் இரவு வரை காக்க வைத்தனர் என்றும் தங்கள் மீதுள்ள குற்றத்தை மறைப்பதற்காக போலீசார் எதிர்தரப்பினருக்கு ஆதரவளிக்கின்றனர் என்றும் ஜெயக்குமாரின் மனைவி நேற்று (மே 25) குற்றஞ்சாட்டினார். மேலும், தனது கணவரின் தற்கொலைக்கு நியாயம் கிடைப்பதற்காக தானும், தனது குழந்தைகளும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையும் படிங்க: இலவசமாக பிரியாணி கேட்டு தகராறு செய்த ரவுடி - சிறையில் விருந்து வைத்த காவல்துறை!