மயிலாடுதுறை: சீர்காழி அருகே கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர், சக்திவேல் (45). இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சக்திவேல், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினந்தோறும் குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளார்.
இதேபோல் நேற்றும் (மே 11) தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து சக்திவேல் சந்தேகத்திற்கு இடமான முறையில் தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் வீட்டின் அறையில் இறந்து கிடந்துள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் மனைவி வசந்தாவிடம் விசாரித்தபோது, தன்னிடம் தகராறு செய்துவிட்டு கணவன் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
அதனை நம்பிய உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் இன்று (மே 12) சக்திவேலின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்திருந்தனர். இதனையடுத்து இறந்த சக்திவேலின் உடலைக் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு தகனமேடையில் கிடத்தி இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் புகழ்வேந்தன் சக்திவேலின் இறப்பின் மீது சந்தேகம் இருப்பதாக சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக்-கிடம் தொலைபேசி வாயிலாகப் புகார் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சுடுகாட்டில் இருந்த சக்திவேலின் உடலைக்கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சக்திவேலின் மனைவி வசந்தா மற்றும் மகன் ரூபனிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மனைவி வசந்தா நடத்தையில் சந்தேகப்பட்டு சக்திவேல், குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மனைவி வசந்தா, சக்திவேலை சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது.
அதனை மறைப்பதற்கு வீட்டில் இருந்த துணிகளை இறந்த சக்திவேல் மீது போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து அறையின் கதவை மூடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாய் கொலை செய்ததை மறைத்து மகன் ரூபன் தந்தை உடலை அடக்கம் செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து தாய், மகன் இரண்டு பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை