நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு இன்று தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மீனவ கிராம மக்கள், கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், மக்கள் மத்தியில் பேசிய அவர், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன் என்றும், முதற்கட்டமாக குடிநீர் பிரச்னை, மீன்பிடி தடைகாலம் நிவாரணம், காவிரி நீர் பிரச்னை உள்ளிட்டவைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என உறுதி அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் மக்கள் தண்ணீரின்றித் தவித்து வருகின்றனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களின் தாகம் தீர்க்கவாவது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்" என்றார்.