நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 10ஆவது ’தேசிய வாக்காளர் தினத்தை’ முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியை, வருவாய்த் துறை அலுவலர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். நகரின் முக்கியச் சாலைகளின் வழியே சென்ற இப்பேரணி மீண்டும் தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்தது. இதில், கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்று, வாக்காளர் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பேரணி சென்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தொடங்கிவைத்தார். பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவுற்றது. பேரணியில் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகராட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர் பரணி, நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு பொது அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணி முக்கிய வழியாகச் சென்று, நகர் மன்றத்தை வந்தடைந்தது. இப்பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், நகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி