காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் என்பவர் இரண்டு பெண்களுடன் கடந்த 25ஆம் தேதி வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இரண்டு நாட்கள் ஆகியும் அறை காலி செய்யப்படாத காரணத்தால் விடுதியின் மேலாளர் அறைக்கு சென்று பார்த்தபோது, பூட்டியிருந்த அறையினுள் ஒரு பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் உயிரிழந்த பெண் கவிதா என்பதும், அவர் தஞ்சாவூரை சேர்ந்தவர் என்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. மேலும், சோழிங்கநல்லூரில் இருந்து வந்த அருளானந்தம் அழைத்து வந்த இரு பெண்களில் ஒருவர் கவிதா, மற்றொருவர் அவரது மனைவி சுமதி என்ற தகவலும் கிடைத்தது. இதனையடுத்து சோழிங்கநல்லூரில் வைத்து சுமதியை கைதுசெய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது, கவிதாவுக்கும் எனது கணவர் அருளானந்தத்துக்கும் தொடர்பு இருந்தது. அவர் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால், நானும் என் கணவரும் சேர்ந்து கவிதாவை அடித்து கொலை செய்துவிட்டோம் என்று ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் சுமதி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருக்கும் அவரது கணவர் அருளானந்தத்தை வலைவீசித் தேடிவருகின்றனர்.