மயிலாடுதுறை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் அம்பேத்கர் திருவுருவப்படத்தை வைத்து மலரஞ்சலி செய்து மரியாதை செய்தனர்.
இந்நிலையில் கிட்டப்பா அங்காடி முன்பு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு, முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈழவளவன் தலைமையில் மரியாதை செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தலைஞாயிறு மதகடியில் அம்பேத்கர் நினைவு தினத்தை அனுசரிப்பதற்கு அனுமதி வழங்காமல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
கடந்த ஆண்டு பட்டவர்த்தி பகுதியில் அம்பேத்கர் நினைவு தினத்தில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மாற்று சமுதாயத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் கலவரம் ஏற்பட்டதன் காரணமாக, இன்று அம்பேத்கர் நினைவு தினத்தில் பட்டவர்த்தி தலைஞாயிறு மதகடி பகுதியில் 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈழவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரத்தால் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை பட்டவர்த்தி தலைஞாயிறு மதகடி பகுதியில் கொண்டாட முடியாமல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில், மாவட்ட நிர்வாகமே பட்டவர்த்தி தலைஞாயிறு மதகடி பகுதியில் அம்பேத்கருக்கு மரியாதை செய்வதாக, எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தனர். இதனால் நாங்கள் நிகழ்ச்சியை கைவிட்டோம்.
ஆனால், உடன்படிக்கையின் படி நடக்காமல், இன்று அம்பேத்கர் நினைவு தினத்தில் தலைஞாயிறு மதகடி பகுதியில் அம்பேத்கர் திருவுருவப் படம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்த 1 வருடமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுமட்டுமின்றி 144 தடை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு, இந்திய தேசத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அம்பேத்கர் நினைவு தினத்தை அனுசரிக்க அனுமதி கேட்ட பொறுப்பாளர்களுக்கு எந்த தகவலும் அளிக்காமல் நள்ளிரவில் 144 தடை உத்தரவு பிறப்பித்து அரசுக்கு தலை குனிவை ஏற்படுத்தும் செயலை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அரசு உடனடியாக இந்தப் பிரச்னை தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: காவி உடை,நெற்றியில் விபூதியுடன் அம்பேத்கர்: குருமூர்த்தி கைது - திருமாவளவன் கண்டனம்!