மயிலாடுதுறை: சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் செம்பதனிருப்பு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் பட்டா மாற்றம் செய்வதற்காக வந்துள்ளார். அப்போது செந்தில்நாதன் பட்டா மாற்றம் செய்ய செல்வராஜிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் கோபம் கொண்ட செல்வராஜ் இதுகுறித்து நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரூ.5 ஆயிரம் பணத்தில் ரசாயனப் பொடியைத் தடவி செல்வராஜிடம் கொடுத்து செந்தில்நாதனிடம் கொடுக்கச் சொல்லி உள்ளனர். அதனைத்தொடர்ந்து செல்வராஜ் செந்தில்நாதனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது செந்தில்நாதன், தான் சட்டநாதபுரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து (பிப்.25) அவரது வீட்டிற்குச்சென்ற செல்வராஜ் தான் எடுத்துச்சென்ற ரசாயனப்பொடி தடவிய பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
பின்னர் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து செந்தில்நாதனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து நாகை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். இச்சம்பவம் சீர்காழிப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலி புகார்கள் மூலம் அலுவலர்களை மிரட்டி லஞ்சம் வாங்கியவர் மீது வழக்குப்பதிவு