நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தரங்கம்பாடியைச் சேர்ந்த முரளி என்பவர், தனது சகோதரர்கள் பாலசுந்தரம் மற்றும் ஜெயராஜன் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். மூவரும் ஹைடெக் சர்ச் பவுண்டேசன் என்ற பெயரில் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை கண்டுபிடிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு வெளியூர் சென்றிருந்த சகோதரர்கள் மூவரும் இன்று காலை வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டுவாசலில் நிறுத்தியிருந்த இனோவா கார் கண்ணாடிகள் மற்றும் வாசல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின் உள்ளே சென்று பார்த்தபோது மூன்று அறைகள் மற்றும் மாடியில் இருந்த அறைகளில் வைத்து இருந்த அலமாரிகள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஒன்றரை லட்சம் பணம் மற்றும் 7 பட்டுப்புடவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து முரளி பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.