மயிலாடுதுறை நகர்ப் பகுதிகளில் உள்ள கடைகளில் கர்நாடகா மாநிலம், மைசூர் பகுதியைச் சேர்ந்த தேவூ (28) , ராஜிவ் (48) ஆகிய இருவர் தங்களுக்கு புதையல் கிடைத்துள்ளதாக வணிகர்களிடம் கூறி, பெரிய அளவிலான குண்டுமணி மாலைகளை காண்பித்துள்ளனர்.
மேலும் இந்த தங்க குண்டுமணி மாலைகளை வெளியில் விற்பனை செய்தால் மாட்டிக் கொள்வோம் என்பதால், தங்கள் குடும்பத்தினருக்கு மருத்துவச்செலவிற்கு உடனடியாக பணம் தேவைப்படுவதால் விற்பனை செய்வதாக, வணிகர்களிடம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து குண்டுமணி மாலைகளிலிருந்து 1 கிராம் மதிப்பு உள்ள இரண்டு குண்டு மணிகளை மட்டும் வணிகர்களிடம் கொடுத்து முழுவதுமாக தங்கத்தினால் ஆன குண்டுமணி மாலைகள் என நாசுக்காக பேசி நம்ப வைத்துள்ளனர். இதனை நம்பி ஒருவர் 5 லட்சம் ரூபாய் பணமும் , மற்றொருவர் ஒரு லட்சம் ரூபாய் பணமும் கொடுத்து குண்டுமணி மாலைகளை வாங்கியுள்ளனர்.
வாங்கிய பின்பு குண்டுமணி மாலைகளை வணிகர்கள் சோதித்த போது, அவை போலியானவை என அறிந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வணிகர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து புகாரின் அடிப்படையில் ரயில் மூலம் வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற குற்றவாளிகள் தேவூ, ராஜிவ் ஆகியோரை காவல் துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து குற்றவாளிகள் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலியான குண்டுமணி மாலைகளை தங்கம் எனக்கூறி வணிகர்களை நம்ப வைத்து ஏமாற்றிய இந்த நூதன மோசடி சம்பவம், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓசி பிரைட் ரைஸ் கேட்டு தகராறு.. கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய 5 பேர் கைது!