மயிலாடுதுறை: சீர்காழி அருகேவுள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமமான அளக்குடியைச் சேர்ந்தவர் விவசாயி அண்ணாதுரை. இவரது பசு அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி, பாலசுந்தரம், மன்மதன், சுபாஷ் ஆகியோருக்குச் சொந்தமான வயல்களில் மேய்ந்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த வயிலின் உரிமையாளர்கள் நான்கு பேரும் சேர்ந்து பசுவின் இரண்டு காதுகள், வால், இடுப்புப் பகுதிகளில் அரிவாளால் வெட்டினர். இதனால், அந்தப் பசு ரத்தக் காயங்களுடன் மரண ஓலமிட்டு துடிதுடித்துக்கொண்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அண்ணாதுரை, இது குறித்து வயலின் உரிமையாளர்கள் நான்கு பேர் மீதும் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ரவி, பாலசுந்தரம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
வயலின் உரிமையாளர்கள் மீது வழக்கு
விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அண்ணாதுரைக்குச் சொந்தமான பசு அவர்களது வயலில் மேய்ந்து, பயிர்களைச் சேதம் செய்துவந்ததாகவும், இது தொடர்பாக பலமுறை அண்ணாதுரையிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் ஆத்திரத்தில் பசுவைத் தாக்கியதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து ரவி, பாலசுந்தரம், மன்மதன், சுபாஷ் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அங்கிருந்த ரவி, பாலசுந்தரம் ஆகிய இருவரை கைதுசெய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள மன்மதன், சுபாஷ் ஆகியோரைத் தேடிவருகின்றனர். தற்போது காயமடைந்த பசுவுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: பசுவை தேசிய விலங்காக அறிவிக்க யோசனை!