மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. குத்தாலத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா உபயோகிப்பதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதும் சட்டத்திற்கு புறம்பாக கடைகளில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் நகராட்சி உணவுபாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் அடங்கிய குழுவினர் மயிலாடுதுறை நகரில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கூறைநாடு பகுதியில் காக்கும் பிள்ளையார் கோவில் தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனை செய்த ஜாகீர்உசேன் மற்றும் ஆற்றங்கரை தெருவில் உள்ள குடோனில் ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த நடேசன் ஆகிய இருவரை கைது செய்து கடை மற்றும் குடோனிற்கு சீல் வைத்தனர்.
தொடர்ந்து பெசன்ட் நகரில் உள்ள கடைக்கும் சீல் வைத்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து 3 கடைகளுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த அதிரடி சோதனை அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி வசந்தராஜ் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம் - பொருட்களைத் திருடிய நபர் கைது