நாகை மாவட்டத்தில் 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜுன் 15) நடைபெற்றது. அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாட்டில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்தும், பலகட்ட போராட்டங்களை நடத்துவது என்றும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் சார்பாக வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகின்ற மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், மழை நீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்காமல், ஏரி குளங்களை தூர்வாராமல் மத்திய அரசின் 10,000 கோடி ரூபாய் நிதியை மாநில அரசு கொள்ளையடித்ததாக குற்றம்சாட்டிய அவர், தமிழ்நாட்டில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை கையகப்படுத்தி, அதனை மீண்டும் நீர்நிலைகளாக மாற்றி, ஏழு கோடி தமிழ்நாடு மக்களுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழ்நாடு அரசை கண்டித்து வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் எனவும் எச்சரித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய வேல்முருகன், சமூகப் பதற்றம், சாதிய மோதல்களை தூண்டிவிடும் வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசி வருவதாகவும், இது போன்ற பேச்சுகளை ரஞ்சித் நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்தார். மேலும், ராஜராஜ சோழன் ஆட்சியில் நிலங்கள் அனைத்தும் மன்னர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்ததாகவும், யார் நிலங்களையும் யாரும் பறிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், மாபெரும் வரலாற்று மன்னனை இழிவுபடுத்தி குறுகிய வட்டத்திற்குள் அடக்குவது ஏற்க முடியாது என்று கூறினார்.