மயிலாடுதுறை: சீர்காழி நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். மறைந்த நெல் ஜெயராமன் தொடங்கி வைத்த நெல் திருவிழாவின் 7ஆம் ஆண்டு விழா நேற்று (ஆக.30) நடைபெற்றது.
வழக்கமாக இரண்டு நாள்கள் நடைபெறும் விழா கரோனா பரவல் காரணமாக ஒருநாள் மட்டுமே நடைபெற்றது.
தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் நல்லசோறு ராஜமுருகன், தஞ்சை கோ.சித்தர், மரபு விவசாயி, காரைக்கால் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பாரம்பரிய நெல்லின் நன்மைகள் மற்றும் மரபு வழி விவசாயம் குறித்து எடுத்துரைத்தனர்.
விழாவில் 70க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள்
அதனைத் தொடர்ந்து பாரம்பரிய நெல் விதை ரகங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. விழாவில் 70-க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு நெல்விதைகள் பெற்ற விவசாயிகள் அவற்றின் இரண்டு மடங்கு விதை நெல்லை திருப்பி வழங்கினர்.
அரசுக்கு கோரிக்கை
விழாவில் பேசிய அறக்கட்டளை நிறுவனர் சுதாகர், அங்கன்வாடி சத்துணவிலும் மாணவர்களுக்கு இயற்கை முறை விவசாயத்தில் விளைவித்த, அரிசியை பயன்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் முன்னோடி இயற்கை விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தகுந்த இடைவெளியுடன் விழாவில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆண்டுகள் கடந்து பள்ளி வாசம் காணும் மாணவர்கள் - செப்.1 பள்ளிகள் திறப்பு உறுதி