நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் கூடுதல், சார்பு, குற்றவியல், நீதித்துறை நடுவர் என ஏழு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், மாவட்ட அளவிலான வழக்குகளுக்கு நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளில் 65விழுக்காடு வழக்குகள், மயிலாடுதுறை கோட்டத்தை சார்ந்த, மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாகளின் வழக்குகள் ஆகும்.
இதனால் இந்த வழக்குகளை விசாரிக்க மயிலாடுதுறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தொடங்க வேண்டும் என்று, வழக்கறிஞர்கள், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாவட்ட நீதிபதியின் பரிந்துரையை ஏற்று மயிலாடுதுறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை தொடங்க அனுமதி வழங்கினார்.
அதன்படி, இன்று மயிலாடுதுறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இந்த புதிய நீதிமன்றங்களை மாவட்ட தலைமை நீதிபதி பத்மநாபன் திறந்துவைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மயிலாடுதுறை பகுதி மக்கள், நாகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வருவதற்கு நீண்ட நேரம் ஆகும்.
ஆனால் தற்போது மயிலாடுதுறையில் புதிய நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளதால், இனிமேல் அவர்கள் வழக்குகளை இங்கேயே சந்திக்கலாம். நீதிகேட்டு நாகப்பட்டினம் வருவது தவிர்க்கப்பட்டுள்ளது என்றார்.