மயிலாடுதுறையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சித்தர்காடு திருஞானசம்பந்தர் ஆலயத்தின் உபகோவிலான காவேரி நகர் அருள்மிகு சக்தி மாரியம்மன் கோயிலுக்குச்சொந்தமான 1,728 சதுர அடி பரப்பளவிலான கட்டடத்தை, கோவிந்தன் என்ற தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து புதிய கட்டடமாகக் கட்டி, சாக்கு குடோனாக உபயோகித்து வந்தார்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் தொடர்பாக, அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்திய விசாரணையில், அந்த கட்டடத்திற்கு வாடகை செலுத்தாமலும் உரிய ஆவணங்கள் என எதுவும் இல்லாத காரணத்தினால், சந்தை மதிப்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இவ்விடம் ஆக்கிரமிப்பு இடம் என்று அறிவிக்கப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று (ஆக.25) மயிலாடுதுறை அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், தனி வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் அலுவலர்கள் பூட்டி சீல் வைத்து அறிவிப்புப் பலகையும் வைத்தனர். முறையான அறிவிப்பு வழங்காமல் பூட்டி, சீல் வைத்ததாக பாட்டாளி மக்கள் கட்சியினர் அலுவலர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு அளிக்குமாறு அலுவலர்கள் தெரிவித்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்து அறநிலையத்துறையின் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகளைத் திறந்துவைத்த முதலமைச்சர்