நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மாயூரம் கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், விவசாயிகளிடமிருந்து பருத்தியை கொள்முதல் செய்ய கும்பகோணம், ஆக்கூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த நான்கு வியாபாரிகள் மட்டும் ஏலத்தில் கலந்துகொண்டனர்.
இவர்கள் மற்ற வியாபாரிகளை ஏலத்தில் கலந்துகொள்ளவிடாமல் விலை நிர்ணயம் செய்துகொண்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று விவசாயிகள் கொண்டுவந்த பருத்தியை வியாபாரிகள் பார்வையிட்டு ஒரு குவிண்டால் ரூ 5,500 முதல் ரூ 5,800 வரை விலை நிர்ணயம் செய்தனர். எனினும், பருத்திக்கு உரிய பணத்தை விவசாயிகளுக்கு வழங்குவதில் வியாபாரிகளுக்கு இடையே சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதில், ஏற்பட்ட காலதாமதத்தினால் விவசாயிகள்-வியாபாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த வியாபாரிகள் பருத்திக்கு உரிய பணத்தை வழங்காமல் சென்றுவிட்டனர்.
இதனைக் கண்டித்து விவசாயிகள் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் கூறைநாடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் இந்துமதி, காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை ஆகியோர் திங்கள்கிழமை பருத்திக்கு உரிய பணத்தை பெற்றுத் தருவதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து, விவசாயிகள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.