1991ஆம் ஆண்டு தஞ்சையிலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக நாகப்பட்டினம் உருவானபோது மயிலாடுதுறை நாகையோடு இணைக்கப்பட்டது. பின்னர், 1997ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உருப்பெற்ற போதும் அது புது நாகையின் அங்கமாகவே நீடித்து வந்தது.
நாகை மாவட்டத்தின் மக்கள் தொகை சுமார் 15 லட்சம். இதில் மயிலாடுதுறை கோட்டத்தில் வசிக்கும் மக்கள் தொகை 9.5 லட்சம். காவிரி, கொள்ளிடம் என்ற இரண்டு பெரிய ஆறுகள் ஓடும் கடைமடையான மயிலாடுதுறை கோட்டத்தில் விவசாயமும், மீன்பிடித்தலும் முக்கிய தொழில்களாக இருந்து வருகிறது.
தமிழர் வரலாற்றில் புகழ்பெற்ற தொல் கடற்கரை நிலமான பூம்புகார் இங்கு தான் அமைந்திருக்கிறது. சைவக்குரவர்களால் பாடல் பெற்ற திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு உள்ளிட்ட சைவத் திருத் தலங்கள், தருமபுரம், திருவாவடுதுறை ஆகிய ஆதீன மடங்கள், பாடல்பெற்ற 48 சிவாலயங்கள் என்று மயிலாடுதுறை கோட்டத்தின் சிறப்புகள் அதிகம். 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த தரங்கம்பாடி கோட்டை இதன் மற்றொரு சிறப்பு.
150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது மயிலாடுதுறை. நகராட்சியில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாக்கள், மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி என்ற மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள், ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள், இரண்டு நகராட்சிகள், மூன்று பேரூராட்சிகள் உள்ளன.
குறிப்பாக, மயிலாடுதுறை மக்கள், நாகப்பட்டினம் செல்ல வேண்டும் என்றால், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. நாகப்பட்டினம் மாவட்டம் கடற்கரையை மையமாக வைத்து பிரிக்கப்பட்டது. இதனால், கொள்ளிடம் முதல் கோடியக்கரை வரை 180 கி.மீ தூரமுள்ள மிக நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம்.
இதனால், மயிலாடுதுறை கோட்டத்தைச் சார்ந்த கொள்ளிடம், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் அலுவல் காரணமாக, நாகப்பட்டினம் செல்ல வேண்டியிருந்தால், நீண்ட தூரம் பிரயாணம் செல்ல வேண்டியிருந்தது. சுனாமி, தானே புயல், ஒக்கி புயல், கஜா புயல், கொள்ளிடம் ஆற்றில் 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் நிர்வாக ரீதியாக பொதுமக்களைப் பாதுகாப்பது மாவட்ட நிர்வாகத்துக்கு பெரும் சவாலாகவே இருந்தது.
2011ஆம் ஆண்டு மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. இதுதொடர்பாக வருவாய் நிர்வாகத்துறை ஆணையருக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் 2013ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி நாகை ஆட்சியருக்கு வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் கடிதம் அனுப்பினார். அதன்படி மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை அமைப்பதற்காக, கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி அரசுக்கு நாகை ஆட்சியர் அனுப்பி வைத்தார்.
ஆனால், அதற்கு பிறகும் மயிலாடுதுறை மாவட்டத்தைப் பிரிப்பதற்கு தலைமைச் செயலாளர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து நீதிமன்றம் தலையிட்டு மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த வழிக்கறிஞர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
அவர் அளித்த மனுவை பரிசீலித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை அப்போதைய தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் கொடுத்துள்ள மனுவை தலைமைச் செயலாளர் சட்டவிதிகளின்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் அறிவித்துள்ளது மயிலாடுதுறை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை பின்பற்றவில்லை எனில் ஓராண்டு சிறை