புதுச்சேரியை அடுத்துள்ள காரைக்கால் திருநள்ளாறு அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் வரும் 27ஆம் தேதி நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவை கோவிட்-19 பரவல் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அத்துடன், பக்தர்களை அனுமதிப்பது குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் அறநிலையத் துறை செயலர் சுந்தரேசன், காரைக்கால் ஆட்சியர் அர்ஜுன் சர்மா ரெட்டி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்தாலோசித்து முடிவுசெய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையோரம் உள்ள தனியார் விடுதியில் இன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் ஐந்து பேர் குழு ஆலோசனை நடத்தியது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, “உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி, முன்னரே தீர்மானித்த பாதுகாப்பு விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்து, கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
சிறப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள விழாவில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொண்ட பிறகே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். சனிப்பெயர்ச்சி விழா வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : பணி செய்யவிடாமல் மிரட்டல் - இளைஞர்கள் மீது நடவடிக்கை கோரி அரசு மருத்துவர் மனு