மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருமங்கலம் ஊராட்சியில் திருமங்கலம் முதல் பாண்டூர் வரை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரமுள்ள இணைப்பு தார்ச்சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இங்கே இந்தச் சாலை வழியாக தினமும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் சென்றுவருகின்றனர்.
மேலும், விவசாயப் பொருள்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களும் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றன. குண்டும் குழியுமான சாலை மிகவும் சேதமடைந்த காரணத்தால் இதனைப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று தமிழ்நாடு அரசு 2 கோடி 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் புதிய இணைப்பு தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று (பிப். 15) நடைபெற்றது.
மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை அதிமுக ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் மகேஸ்வரி முருகவேல், மயிலாடுதுறை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவா, ஒன்றிய சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் ரஃபிக், மாவட்ட கழக ஒன்றிய பேரூர் கழக விவசாய பிரிவு நிர்வாகிகள் பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தது ஃபாஸ்டேக் முறை