கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. தற்போது நவம்பர் 10ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதித்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை கடைப்பிடித்து திரையரங்குகளை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து திரையரங்கத்தின் ஊழியர்கள் திரையரங்குகளை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மயிலாடுதுறையில் உள்ள திரையரங்கில் அரசின் விதிமுறைப்படி பொதுமக்கள் சமுதாய விலகலை கடைபிடித்து படம் பார்ப்பதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திரையரங்கு, அங்கு உள்ள கழிப்பறைகளை கிருமிநாசினி கொண்டு இருக்கைகள், மக்கள் கை வைக்கும் இடங்கள், சுத்தப்படுத்தப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரைப்படம் பார்ப்பதற்கு வரும் பொதுமக்களுக்கு கிருமி நாசினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் திரையரங்கிற்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என்றும் படம் பார்க்க வருபவர்கள் கட்டாயம் அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திரையரங்க நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.