மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்க்கும் பெண்ணிடம் 4 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய வழிப்பறி திருடனை ஒரு மணி நேரத்தில் இரண்டு இளைஞர்கள் உதவியுடன் ரோட்டில் நடந்து சென்ற திருடனை பிடித்த உளவுப் பிரிவு பெண் தலைமைக் காவலருக்கு சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், உளுத்துக்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ராஜகுமாரி (38) என்ற பெண் பட்டமங்கலத் தெருவில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று (ஜூன் 16) மதியம் ஸ்டுடியோவுக்கு வந்த மர்ம நபர் 'பக்கத்து கடை பூட்டி இருக்கிறது எப்போது வருவார்கள்' என்று விசாரித்துவிட்டு குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார்.
தண்ணீர் கொடுத்த போது அவர் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணை அந்த பெண்ணின் முகத்தில் வீசி விட்டு, அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது தாலி செயினை பறித்துக் கொண்டு ஓடிய மர்ம நபர் நேற்றைய முன் தினம் (ஜூன் 15) இரவு சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரணை செய்தபோது எடுத்த போட்டோவில் இருந்த நபர் என்று தெரியவந்தது.
இதையும் படிங்க: Moveit: அமெரிக்காவை அதிர வைத்த சைபர் தாக்குதல்; அரசு, தனியார் நிறுவன தகவல்கள் திருட்டு!
இதனைத்தொடர்ந்து உடனடியாக போலீசார் மயிலாடுதுறை நகரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை உளவுப் பிரிவு பெண் தலைமைக் காவலர் 'கோப்பெருந்தேவி' ரயிலடி ரோட்டில் சென்ற திருடனை அடையாளம் கண்டு மடக்கிப் பிடித்தார். அப்போது தப்பி ஓடிய நபரை இரண்டு இளைஞர்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்தார்.
தொடர்ந்து, போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து 4 பவுன் தாலி செயினை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் கூறைநாடு திருமஞ்சன வீதியைச் சேர்ந்த ரஜாக்(28) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ரஜாக்கை சிறையில் அடைத்தனர்.
பட்டப்பகலில் கடையில் புகுந்து தாலி செயினை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிய திருடனை ஒரு மணி நேரத்தில் மயிலாடுதுறை போலீசார் பிடித்து நகையை மீட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இளைஞர்கள் உதவியுடன் திருடனைப் பிடித்த தனிப்படை தலைமை காவலர் கோப்பெருந்தேவிக்கு சமூக வலைதளத்தில் பொதுமக்களின் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: போகாதீங்க டீச்சர்..... பிரிய மனமில்லாமல் அழுத பள்ளி மாணவர்கள்!