தமிழகத்தில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுத்து கொள்ள ஓஎன்ஜிசி, வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, நாகை மாவட்டம் வேதாரண்யம் கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயுவை எடுக்க முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், நேற்று நாகை மாவட்டம் செருதூரில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், விவசாய சங்கத்தினர் மற்றும் மீனவ கிராம தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க போவதில்லை. அதனையும் மீறி விளை நிலங்கள் மற்றும் கடலோர பகுதிகளில், குழாய் பதிக்க முற்பட்டால் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும். இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மீனவர்கள் மற்றும் விவசாய சங்கங்களை ஒன்று திரட்டி நாகையில் கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.