நாகை மாவட்டம், திருமருகல் அடுத்துள்ள துறையூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அப்பகுதியில் உள்ள தெற்கு புத்தாரில் அமைக்கப்பட்டிருந்த பாலம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், கடைமடை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கட்டுமானத்தில் இருந்த அந்த பாலம் முழுவதும் ஆற்று நீரில் மூழ்கியது. இதனால் பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பிகள் மட்டுமே வெளியில் தெரிந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டு மணல், கம்பி, ஜல்லி உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டுமான பொருட்கள் கரையோரம் தேங்கிக்கிடக்கின்றன.
இந்நிலையில் ஆற்றைக் கடப்பதற்கு வேறு வழியில்லாததால் அருகிலுள்ள பத்து அடி உயரம் கொண்ட மதகு மீது ஏறி பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் ஆற்றைக் கடக்கின்றனர். மேலும், அந்த கிராமத்திற்கான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் வெளியே செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர்.
இதற்கிடையே சேதமடைந்த பாலத்திற்கு மாற்றாக புதிய பாலம் அமைக்கும் பணிகள் தாமதமாக தொடங்கியதே இந்த நிலை ஏற்படக் காரணம் என்று தெரிவித்த அப்பகுதியினர், இதுதொடர்பாக ஒப்பந்ததார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். உடனடியாக மக்கள் பயன்பெறும் வகையில் தற்காலிக மரப்பாலம் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.