மழையும், காவிரி நீரும் இல்லாமல்போனால் வாழ்வாதாரமே இல்லை என்ற நிலை டெல்டா மாவட்டங்களில் மக்களை மிரட்டி வரும் நிலையில், அதே மழையும், ஆற்று நீரும் கடலில் கலந்து கடலின் நீர்மட்டம் உயர்வதும் ஒரு புறம் மக்களை அச்சுறுத்திவருகிறது.
இயற்கையைத்தான் தடுக்கமுடியாது, ஊருக்குள்ளும், வீட்டுக்குள்ளும் புகும் கடல் நீரையாவது தடுப்புச் சுவர்கொண்டு தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அனைவரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சியில் குடியிருப்புப் பகுதியில் கடல்நீா் உள்புகுவதைத் தடுக்கும் வகையில் ஆற்றில் தடுப்புச்சுவா் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினா் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட கடலோரப் பகுதிகளான விநாயகர்பாளையம், ராமானுஜ நாயக்கர் பாளையம், சமயன்தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனார். அங்குள்ள கண்ணப்பமூலை உப்பனாற்றில் ஒரு பக்கத்தில் கரை இல்லாமல் இருப்பதால் கடல் சீற்றமாக உள்ளபோது கடல் நீரும், மழைக் காலங்களில் ஆற்று நீரும் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றது.
இதன் காரணமாக குடியிருப்புப் பகுதியில் நிலத்தடிநீர் முற்றிலுமாக மாசடைந்துள்ளது. கடல்நீர் திடீரென குடியிருப்புகளை சூழ்ந்துவிடுவதால் குடியிருப்புகளிலிருந்து வெளியேர முடியாத நிலை ஏற்படுகின்றது. இதனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நோய் தொற்று பாதிப்புகளும் ஏற்பட்டுவருகின்றன.
எனவே, கண்ணப்பமூலை உப்பனாற்றிலிருந்து தண்ணீா் குடியிருப்புப் பகுதிகளில் உள்புகுவதை தடுக்கும் வகையில் கரையில்லாத பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க தமிழ்நாடு அரசும், நாகை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.
தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்க இருக்கும் நிலையில் மக்களின் இந்தக் கோரிக்கை, ஆபத்து வரும்முன் அடிக்கப்படும் எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது. அரசு இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அசம்பாவிதம் ஏற்பட்டு அதன் பின் மீட்பு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க விரைந்து செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நாகை மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க... தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட ஆற்றின் தடுப்புச்சுவர் சரிவு!