மயிலாடுதுறை: ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் 64 மீனவ கிராமங்கள் இருந்தன. நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டது. புதிய மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்கள் உள்ளன.
இந்நிலையில், புதிய மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தலைமை மீனவ கிராமத்தை தேர்ந்தெடுப்பதற்காக, தரங்கம்பாடி ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சின்னூர் பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, தாழம் பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், மடத்து குப்பம், கீழ மூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், சின்ன கொட்டைமேடு, பழையாறு, கொடியம்பாளையம், சாவடி குப்பம், ஆகிய 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்தார்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மயிலாடுதுறை புதிய மாவட்டத்திற்கு தரங்கம்பாடி மீனவ கிராமம் தலைமை கிராமமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதற்கான பதவி ஏற்பு மற்றும் பரிவட்டம் கட்டும் விழா, தரங்கம்பாடி ரேணுகாதேவி அம்மன் கோயிலில் இன்று (நவ.19) கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி பல்வேறு மீனவ கிராமங்களிலிருந்து வருகைதந்த மீனவர்களுக்கு தரங்கம்பாடி மீனவர்கள் செண்டை மேளம் முழங்க உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் விஜிகே. செந்தில்நாதன், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், பாஜக மாவட்டத் தலைவர் வெங்கடேசன், திரளான மீனவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: உணவில் கண்ணாடி துகள்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்; உணவு பாதுகப்பு துறையினர் சோதனை