நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த புத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், சிவில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவர் பிரேம் குமார்(19). இவர் மாதாந்திர தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், கல்லூரி முதல்வர், துறைத் தலைவர் ஆகிய இருவரும் வகுப்பறையில் சக மாணவர்கள் முன்னிலையில் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாணவர் பிரேம்குமார் மதிய உணவு இடைவேளையில் கல்லூரிக்கு வெளியில் சென்று விவசாயத்திற்குப் பயன் படுத்தக் கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி வந்து பையில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் உணவு இடைவேளை முடிந்து வகுப்பு ஆரம்பித்துள்ளது. துறைத்தலைவர் பாடம் நடத்திகொண்டிருந்தபோது மாணவன் பிரேம்குமார் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்துப் பாட்டிலுடன் துறைத்தலைவர் முன், மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனடியாக சக மாணவர்கள் பிரேம்குமாரை கொள்ளிடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். இந்நிலையில் தற்கொலைக்குக் காரணமான கல்லூரி முதல்வர், துறைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்ததன் பேரில், மாணவர்கள் கலைந்து சென்றனர். மேலும் மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து சிவில் துறை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு வாரம் கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏழு லட்சம் ரூபாய் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள்