பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதைத் தடுக்க கிராமங்கள்தோறும் சென்று பாலியல் தொடர்பான விழிப்புணவை ஏற்படுத்தும் விதமாக அறப்பயணம் 100 நாள் என்ற விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை பெண் விடுதலை கட்சியின் நிறுவன தலைவரும், ஆசிரியருமான சபரிமாலா நாகையில் இன்று (நவ.16) தொடங்கினார்.
முன்னதாக நாகையை அடுத்த சிக்கலில் தனியார் திருமண மண்டபத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்குபெறும் ஆசிரியர், மாணவர்கள், தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியை சபரிமாலா, ”ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிராக 15 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பெண் குழந்தைகள் பள்ளி, கல்லூரிக்குச் செல்லாத நிலையில் வீட்டின் அருகில் உள்ளவர்களால் இந்த அளவிற்கு பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியா பெண் குழந்தைகள் வாழ தகுதியில்லாத நாடாக மாறி வருகிறது. இதனைத் தடுத்து பெண் குழந்தைகளைத் தைரியமாக உருவாக்க கிராமங்கள்தோறும் சென்று துண்டு அறிக்கைகள் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார்.