தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் கரும்புகளை ஏந்தி மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க சர்க்கரைத் துறை ஆணையம் பரிந்துரை செய்த நிதியை வழங்க வேண்டும், என்.பி.கே.ஆர்.ஆர் ஆலை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், மாநில அரசின் பரிந்துரை விலையை 2015-16, 2016 -17ஆம் ஆண்டின் லாபத்தில் பங்கு தொகையை வழங்க கூறிய நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்,
ஆலையை இயக்காமல் முடக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆலையை மீண்டும் இயக்க வேண்டும், ஒரு டன் கரும்புக்கு ரூ. 5 ஆயிரம் விலையை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். என்.பி.கே.ஆர்.ஆர் சர்க்கரை ஆலை தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகள், சங்க மாநில செயலாளர் காசிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.