கரோனாவால் உயிரிழந்த நாகை செய்தியாளர் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி அறிவிப்பு - John Kennedy
கரோனாவால் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி நாகை செய்தியாளர் பி.ஜான் கென்னடி குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாகை மாவட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இரண்டு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”கரோனாவால் உயிரிழந்த செய்தியாளர் ஜான் கென்னடி குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் இத்தருணத்தில் கவனமாகவும், பாதுகாப்பாகவும் பணிபுரிய வேண்டும் என மீண்டும் ஒருமுறை அன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டத்தில் இதுவரை 1,718 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 979 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 719 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா: நாகை செய்தியாளர் மரணம்!