நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் சார்பில், உலகத்தாய்மொழி தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இந்தச் சங்கத்தின் தலைவர் ஜெனிபர் பவுல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொல்லியல் ஆய்வாளர் ஒடிசா பாலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பின்னர் அவர் பேசியதாவது, "உலகம் என்ற சொல்லை உருவாக்கியவர்கள் தமிழர்கள். முதலில் உளியை உருவாக்கியவர்கள் என்ற பெருமை படைத்தவர்கள். உலகில் ஓமன், சீனா, கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளின் தொல்லியல் சான்றுகளில் மட்டுமின்றி, உலகில் உள்ள பழங்குடியின தொல்லியல் சான்றுகளில், தமிழ் இடம்பெற்றுள்ளது. பல காரணிகளால் உலகின் மொழியாக தமிழ் உள்ளது.
மொழி தோன்றி, 40ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், 15லட்சம் வருடத்திற்கு முன்பு மொழி தோன்றுவதற்கு முன்பாகவே தமிழர்கள் வாழ்ந்துள்ளதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் 200 இடங்களில் ஆயிரத்து 300 பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் டைனோசர், மமூத் யானைகளின் உருவங்களும் இடம்பெற்றுள்ளன.
உலகின் பழைமையான டைனோசர் முட்டை அரியலூர் மாவட்டத்தில் கிடைத்துள்ளது. அரியலூர் முதல் பூம்புகார் வரையில் கடலாக இருந்து பின் கடல் பின்வாங்கியுள்ளது. தற்போதும் பூம்புகாரில் 21 கி.மீ., தூரத்திற்கு கடலில் மூழ்கிப்போன நகரம் உள்ளது.
வருசநாடு முதல் கச்சத்தீவு வரையில் வைகை ஆற்றின் நாகரீகம் 293 இடங்களில் சான்றுகள் கிடைத்தும், கீழடியில் மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை அருகே செம்பியன் கண்டியூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நாகரீகங்கள் தெரியவந்துள்ளன. இதுபோல், பழைமையான பூம்புகாரையும் ஆய்வு செய்ய வேண்டும்" என்றார் அவர்.
இதையும் படிங்க: முறைகேடு எதிரொலி - சென்னையில் மட்டும் நடத்தப்படும் தொல்லியல் அலுவலர் தேர்வு