மயிலாடுதுறை: திரைப்பட இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், யோகி பாபு, நடிகை திவ்யன்ஷா கௌஷிக் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ள திரைப்படம் தான் ‘டக்கர்’. இப்படத்தினை தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் தயாரிக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து உள்ளார். அதிரடி திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கவுதம் எடிட்டிங் செய்து உள்ளார்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் என உலகம் முழுவதும் உள்ள திரை அரங்குளில் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் டக்கர் திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ்க்கு அவரது சொந்த ஊரான மயிலாடுதுறையில் பொதுமக்களும், ரசிகர்களும் இணைந்து மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து, நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை விஜயா திரையரங்க வளாகத்தில் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ்க்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திரையுலகில் சாதனை படைத்து வரும் இயக்குனரை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். அதனைத் தொடர்ந்து திரை அரங்கில் ரசிகர்களுடன் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ் டக்கர் திரைப்படத்தை கண்டு களித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டக்கர் திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ் "உலகம் முழுவதும் ஜூன் 9 ஆம் தேதி திரையிடப்பட்டு உள்ள டக்கர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு பகுதிகளில் குடும்பம் குடும்பமாகச் சென்று திரைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை இந்த படத்திற்கு வழங்கி இருக்கிறார்கள். குறிப்பாக எனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் ரசிகர்களும், பொதுமக்களும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்து எனது திரையுலக பயணத்திற்கு பாராட்டு தெரிவித்து, வாழ்த்தினார்கள்.
இவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டக்கர் திரைப்படம் இக்கால தலைமுறைக்கு ஏற்ற வகையில் அனைவரது ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளது. இதில் கதாநாயகனாக சித்தார்த் மிகச் சிறப்பாக நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள், தயாரித்துள்ள பேஷன் ஸ்டுடியோ மற்றும் அனைவருடைய ஒத்துழைப்போடு மிகச்சிறந்த ஒரு படமாக டக்கர் திரைப்படம் ரசிகர்களுக்கு நிறைவு தரும் விதத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்திற்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ரசிகர்களோடும், பொதுமக்களோடும் திரைப்படத்தை கண்டு களித்தது தனக்கு மிகப்பெரிய நிறைவை தருகிறது” என இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Nayanthara: திருமண நாளில் உருகிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி