நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற அக்கரைப்பேட்டை மீனவர்களின் விசைப்படகை, சென்னை காசிமேடு மீனவர்கள் கடந்த 16ஆம் தேதி சிறைபிடித்து சென்றனர். இந்தச் சம்பவத்தில் மீனவர்களை மட்டும் விடுவித்த காசிமேடு மீனவர்கள், படகை பறித்துக்கொண்டனர். இது தொடர்பாக நாகை மீனவர்கள் சென்னை மீன்வளத் துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து படகை விடுவிக்க சென்னை மீன்வளத்துறை அலுவலர்கள் ஆணை பிறப்பித்தனர். இதனை அலட்சியப்படுத்திய சென்னை காசிமேடு மீனவர்கள், பேச்சுவார்த்தைக்கு சென்ற அக்கரைப்பேட்டை மீனவர்கள் 4 பேரை தாக்கிவிட்டு படகிலிருந்த மீன்களையும் விற்பனை செய்து அந்தத் தொகையையும் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பேட்டை மீனவர்கள் குடும்பத்துடன் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர்கள் திடீரென தலையில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது காவல் துறையினர் மண்ணெண்ணெய் கேனை பறிக்க முயன்றனர். இதனால் காவல் துறையினருக்கும் மீனவர்களுக்குமிடையே பெரும் பரபரப்பு நிலவியது.
இதன்பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சென்னையில் சிறைபிடிக்கப்பட்டு வைத்திருக்கும் விசைப்படகை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் அக்கரைப்பேட்டை மீனவர்களிடம் உறுதியளித்ததைத் தொடர்ந்து மீனவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை பின்பற்றவில்லை எனில் ஓராண்டு சிறை