நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் சுற்றுலா தலம் உள்ளது. இங்கு விடுமுறையைக் கொண்டாட நண்பர்களுடன் வந்த சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த பி.டெக் முதலாம் ஆண்டு மாணவன் சந்தீப் குமார் ரெட்டி(18), சக மாணவர்களுடன் கடலில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார்.
இதைக்கண்ட சக மாணவர்கள் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அலையில் சிக்கிய மாணவனை மீட்டு 108 வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பூம்புகார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.