மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் வசந்தராஜ், சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் லாமேக், 14 காவல் நிலைய ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மணல்மேடு காவல் சரகப் பகுதியில் திருட்டு வழக்கில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு 8 பவுன் நகை, ரூ.2.29 லட்சம் பணத்தை பறிமுதல்செய்த மயிலாடுதுறை குற்றவியல் தனிப்படை காவல் துறையினரைப் பாராட்டி வெகுமதி வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி பாலகிருஷ்ணன், "மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல் நிலையங்களை ஆய்வுசெய்து சட்ட ஒழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், குற்ற வழக்குகளைக் கண்டுபிடிப்பதில் எடுக்கப்படும் முயற்சிகள், கண்டுபிடிக்காமல் இருக்கும் வழக்குகள், பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் இடையேயான நட்புறவை ஏற்படுத்தும் வழிமுறைகள், பொதுமக்களிடம் காவலர்கள் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
புதிதாக ஏற்படுத்தப்பட்ட மாவட்டம் மயிலாடுதுறை என்பதால் காவல் துறையில் உள்ள ஒருசில மாற்றங்களுக்கான திட்டங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
டிசிபி, டிசிஆர்பி வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மிக விரைவில் மயிலாடுதுறை முழுமையான காவல் மாவட்டமாக உருவாகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலங்களில் ரவுடிசம் செய்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ரவுடிசம், கஞ்சா-மணல் கடத்துபவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாலியல் தொடர்பாக எந்தந்தப் பகுதிகளில் அதிக அளவில் குற்றங்கள் நடந்துள்ளன என்பதைக் கண்டறிந்து அந்தப் பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்துதல், குற்றங்கள் நடைபெறுவதற்கான காரணங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் காவல் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.