மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ஊராட்சி பர்மா காலனி நகரைச் சேர்ந்தவர் பிரபாகர் (30). இவரது மனைவி மாலதி (27). இவர்களுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பிரபாகர் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்ததால், மாலதி திருவிழந்தூர் அப்பங்குளம் தெருவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்து உள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, மாலதியை சமாதானம் செய்ய பிரபாகர் தனது மாமனார் வீட்டிற்குச் சென்று அங்கேயே தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் மது அருந்திவிட்டு மாலதியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்து உள்ளார். ஆனால், மாலதி வர மறுத்ததைத் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
இவ்வாறு இருவருக்கும் நடந்த பிரச்னையை மாலதியின் சித்தப்பா பாக்கியம் (70) தட்டிக் கேட்டு உள்ளார். அப்போது பிரபாகர், ’உன்னால்தான் எல்லா பிரச்னையும், உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டுச் சென்று உள்ளார்.
இதனையடுத்து, இன்று (செப்.27) காலை வீட்டு வாசல் முன்பு பாக்கியம் இறந்த நிலையில் கிடந்துள்ளார். பின்னர், இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் மற்றும் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார், பாக்கியத்தின் உடலைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாக்கியத்தை கொலை செய்தது பிரபாகர்தான் என்பது உறுதியானதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து, பிரபாகரனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆடு திருடர்களால் எஸ்எஸ்ஐ பூமிநாதன் படுகொலை வழக்கில் செப்.29 ஆம் தேதி தீர்ப்பு!